Sangee Muzangu

DR APJ ABDUL KALAM

Home
Tibet dalai lama
ONRUPATTAAL UNTU VAAZU
Speak With Love
TuuRamagum UravukaL
For International Friends
KALAM
MUMBAI LOCAL
Unity or Disarray
Marutuva parvai
vanakkam nanparkalee
Teacher's Day
Ennaipatrri
tamil inaiya ezuththukal
Aanmeegapaarvai
ungal pathiugal
thamizukum oru vaazththu
India 60 years

DR A P J ABDUL KALAM
kalaam.jpg

பெயர் முனைவர் திரு அ. பி. ஜ. கலாம்

இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

கலாமிற்கு ஒரு சலாம்

 

 


விடை பெற்றார் எங்கள் தலைவர்,

அரசியல் என்னும் அழுக்கு ஓடையில்,

தாமரை இலைபோல் இருந்து  மீண்டார் இன்று,

வாருங்கள் தலைவா இளைய சமுதாயத்தின்
இதயத்தில் ஓடும் கங்கையில்
குளித்து புனிதமடைவாய் இனி ,

இப்படித்தான் இருக்க வேண்டும்
என்பதை மாற்றி,
 இப்படியும் இருக்கலாம்,
என உரைத்த ஆசானே,

ஒருபுறம் ஊழல் சாக்கடை,
மறுபுறம் மதவாத குப்பைக் கிடங்கு
வழியிலோ கிடைப்பதைப் பறிக்க நினைக்கும்
குள்ள நரிக்கூட்டங்கள்,

இவர்களிடமிருந்து வெற்றிகரமாகக் கடந்து வந்த
உன்னையும் இழுத்து விட்டு வேடிக்கை பார்க்க
நினைத்தார்கள் ,
 
ஆனால் கிழிந்த வலையில்
சிக்கா தங்கமீனாய் மீண்டாய் நீ,

இனி உனக்கு நேரமுண்டு எங்களுக்காக
செயலாற்ற. செயலாற்ற விடுவார்களா
என்பது என் கேள்வி???????????????

முதல் குடிமகன் என்ற பதத்துக்கு ஒரு வரைவிலக்கணம்
- அப்துல் கலாம்.


"எந்தவொரு பதவிக்கும் அதற்கான பெருமையோ, அதிகாரமோ கிடையாது. அதை அலங்கரிக்கும் நபர்கள் நடந்துகொள்ளும் விதத்தால்தான் பதவிகள் பெருமைகளையும் அதிகாரங்களையும் பெறுகின்றன' - இந்த வாசகங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை உலகத்துக்கு உணர்த்தி இருக்கிறார் இன்று தனது பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறும் நமது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

இந்தியக் குடியரசின் தலைவர்களாக இருந்த ஒவ்வொருவரும் அந்தப் பதவிக்குச் சில கௌரவங்களைச் சேர்த்தார்கள். அவர்களது தனித்தன்மையால் அந்தப் பதவி மேலும் பரிமளித்தது. ஓரிரு சம்பவங்களைத் தவிர, பெரிய அளவில் இந்தியக் குடியரசின் தலைமைப் பதவி அதை அலங்கரித்தவர்களால் களங்கப்பட்டதில்லை.

களங்கம் என்று அரசியல் பார்வையாளர்களால் குறிப்பிடப்படும் சம்பவங்களும்கூட, அன்றைய ஆட்சியாளர்களின் தவறால் நிகழ்ந்தவையே தவிர குடியரசுத் தலைவராக இருந்தவரால் ஏற்படவில்லை.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், எந்த அளவுக்கு இந்தப் பதவிக்கு கௌரவம் சேர்ப்பார் என்று தெரியாத நிலையில்தான் அந்தப் பதவியில் அமர்ந்தார் அப்துல் கலாம். ஐந்து ஆண்டுகள் கடந்து இப்போது பதவியிலிருந்து அவர் ஓய்வுபெறும்போது, இப்படி ஒரு குடியரசுத் தலைவர் இனி இந்தியாவுக்கு எப்போது கிடைக்கப்போகிறார் என்ற ஆதங்கத்தை அனைவரது இதயங்களும் வெளிப்படுத்தும் அசாதாரணப் புகழோடு விடைபெறுகிறார்.

அரசியல்வாதி அல்லாத ஒருவர், குழப்பமான அரசியல் சூழ்நிலையில் செயல்பட முடியுமா என்பதற்கு விடையளித்திருப்பதுதான் அப்துல் கலாமின் முதல் வெற்றி.

அரசியல்வாதிகள் மீது அதிகரித்து வரும் அதிருப்திக்கு நடுவிலும், நாளைய இந்தியா பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தனது குடியரசுத் தலைவர் பதவியைத் திறம்பட நிர்வகித்தது அப்துல் கலாமின் அடுத்த வெற்றி.

இனிமையாகவும் எளிமையாகவும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் செயல்பட்டு, ஓர் உண்மையான மக்களின் குடியரசுத் தலைவராக வாழ்ந்து காட்டியது அவரது மிகப்பெரிய வெற்றி.

குடியரசுத் தலைவரின் ஆணைப்படி ஒரு விஷயம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை ரகசியமாகக் காக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அவரைச் சந்தித்து அவருடன் ஒரு சில நாள்கள் தங்கிப்போக விழைந்தனர் அவரது உறவினர்கள். குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின்படி, ராமேஸ்வரத்திலிருந்து புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவரது 53 உறவினர்களும், குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்களால் வரவேற்கப்பட்டு, ஊர் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கான எல்லா உபசரிப்புகளுடனும் கவனிக்கப்பட்டனர். ஒரு வாரம் தங்கியிருந்து விடையும் பெற்றனர்.

அவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக, ஒருமுறைகூட அரசு வாகனம் பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல, அவர்களது உணவுக்கான செலவைக்கூடத் தனது தனிப்பட்ட கணக்கில் சேர்த்து அதற்கான கட்டணத்தை வசூலித்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார் குடியரசுத் தலைவர்.

தனது சம்பளப் பணத்திலிருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாயை அரசுக் கணக்குக்கு மாற்ற உத்தரவிட்டார் ஒரு குடியரசுத் தலைவர் என்று நாளைய குடியரசுத் தலைவர் மாளிகை ஆவணங்கள் இதை வெளிப்படுத்தும்.

இரண்டே இரண்டு பெட்டிகளுடன் வெளியேற இருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெருமையை இந்திய வரலாறு பக்கம் பக்கமாக எழுத இருக்கிறது. அந்த அளவுக்கு, அந்தப் பதவிக்கு அவர் பெருமை சேர்த்ததற்குக் காரணம், அவரது நேர்மையும் எளிமையும்; தனது மனதுக்குத் தவறு என்று பட்டதை தைரியமாக வெளிப்படுத்திய உள்ளத்தூய்மை.

நாளைய தலைமுறைக்கு நம்பிக்கை அளித்தவர் என்பதுதான் இந்தியக் குடியரசுக்கு அப்துல் கலாமின் மிகப்பெரிய பங்களிப்பு.

இவரைத் தொடர்ந்து இனி யார் அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திச் செல்வது - அப்துல் கலாமின் தனி முத்திரை.

இதுவரை குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் பதவி ஓய்வுபெற்ற பிறகுதான் "பாரத ரத்னா' பட்டம் பெற்றார்கள். "பாரத ரத்னா' குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முன்னுதாரணம் அப்துல் கலாமால்தான் நிகழ்ந்தது.

இவர்போல இன்னொருவர்...? வருவார், வரவேண்டும். அதுதான் அப்துல் கலாமின் எதிர்பார்ப்பும். அது பொய்த்துவிடலாகாது!
 

குடியரசுத் தலைவர் திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் FeTNA தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவினைத் துவக்கி வைத்து ஆற்றிய உரை
ஜூலை 5, 2003

                                   வாழ்த்துக்கள்

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் ஆண்டுவிழாவில் தமிழர்கள் மட்டுமின்றி எல்லா இந்தியர்களையும் தொடர்புகொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன்.

அதுவும் தமிழ்நாட்டு பள்ளி பிள்ளைகளுக்காக உலகப் புகழ்பெற்ற ப்ரொபஸர் டேவிட் கோல்ட்ஸ்டெயினுடைய மெக்கானிக்கல் யுனிவர்ஸ் அன்ட் பியான்ட் என்ற அறிவியல் சொற்பொழிவை தமிழாக்கம் செய்யும் முயற்சியை இந்த தருணத்தில் துவக்கி வைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இன்று நீங்கள் வாழ்ந்துவரும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் சுதந்திர தினம். இந்த சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நாளும் கோளும்

ஏறக்குறைய 2000 தமிழர்கள் இங்கு குழுமியுள்ளீர்கள். உங்களிடம் இந்த தருணத்தில் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அமெரிக்காவில் சென்று பணியாற்றி வருகிறீர்கள். அதைப்போல நான் சயின்டிஸ்ட்டாக இந்தியாவில் பணியாற்றி வந்தேன். பிறகு அண்ணா யுனிவர்ஸிட்டியில் புரொபஸராக பணியாற்றினேன். அங்கு ஏராளமான மாணவர்களை சந்தித்து உரையாற்றுவேன். ஒரு வாரத்தில் பத்து வகுப்புகள் எடுத்து வந்தேன். பிறகு என்னை பிரஸிடென்ட் ஆக நாமினேட் செய்தார்கள். இந்த பிரஸிடென்ட் ஆகும் வைபவத்தை கோ-ஆர்டினேட் செய்ய ஒரு மந்திரியை நியமித்தார்கள். நான் சென்னையில் இருக்கும்போது அந்த மினிஸ்டர் டெல்லியிலிருந்து போன் செய்து சொன்னார் "கலாம்ஜி உங்கள் preference என்ன? எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாரையாவது contact செய்கிறீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன் "பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் கேலக்ஸியைச் சுற்றுகிறது. ஆகவே time என்பது இந்த நடைமுறையை குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அவ்வாறு இந்த இரணடு நிகழ்ச்சியும் நடைபெறும் வரை எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. டைம் ஒரு astronomical நிகழ்ச்சியே தவிர astrological நிகழ்ச்சி இல்லை என்றேன்." அந்த அமைச்சருக்கு ரொம்ப ச்ந்தோஷம். இதை பத்திரிக்கை நியூஸாக கூட கொடுத்துவிட்டார். இவ்வாறாக நான் ஜூலை 25ம் தேதி 2002ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன்.

ஆகவே பூமி சூரியனை சுற்றுவது போல சூரியன் கேலக்ஸியை சுற்றி வருகிறது. அதற்கு 250 மில்லியன் வருடங்கள் ஆகிறது. இது போன்ற இயற்கை நிகழ்வுகளை எல்லாம் அறிய முயற்சிகள் தொடர்ந்து வருகின்றது. முதலில் நியூட்டன் புவியீர்ப்பு சக்தி மற்றும் laws of motion என்ற தத்துவங்களைச் சொன்னார். பிறகு வந்த மாக்ஸ்வெல் electro magnetic theory கொடுத்தார். அதன் பிறகு வந்த சுப்ரமணியம் சந்திரசேகர், "சந்திரசேகர் லிமிட்" என்று சொல்லப்படுகிற தனது தத்துவத்தை உப்யோகப்படுத்தி நட்சத்திரங்களின் life எத்தனை நாள் என்று கண்டுபிடித்தார். அவர் கருத்துப்படி நமது சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் ஒளிரும். ஏறக்க்குறைய சமகாலத்தவரான ஐன்ஸ்டீன் தனது ரிலேடிவிடி தியரி கொடுத்தார். அதன் பிறகு ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய 'காலம் ஒரு சுருக்கமான சரித்திரம்' என்ற தத்துவ புத்தகத்தின் மூலமாக இந்த கருத்துகளை அனைத்தையும் ஒன்றிணைத்து கேலக்ஸிகள் இயங்குவதை விளக்கிச் சொல்ல முயன்றார். அவர் கடைசியாக தம்முடைய தியரியில் இறைவனுக்கு ஒரு உருவம் கொடுத்து யூனிஃபைட் தியரி உருவாக்க முயற்சித்தார். இது ஒரு பெரிய துறை. இதை அறிவதின் மூலம் உலகம் எப்படி உருவானது என்றும், நாம் ஏன் பிறந்தோம்? எப்படி பிறந்தோம்? எப்படி வாழ்வோம் என்பதை அறிய வாய்ப்பு உள்ளது.

இந்த நேரத்தில் ஜனக மகாராஜாவின் அவையில் இருந்த அஷ்டவக்ரா சொன்னது - அஷ்டவக்ரா ஒரு பெரிய ஞானி - என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார் "I am the universe and universe is my conciousness" என்றார். நான் நினைக்கிறேன் இந்த தத்துவத்தை சேர்த்து முயற்சி செய்தால் ஒரு நல்ல யூனிஃபைட் தியரி உருவாகுமோ என்ற கருத்து என் மனதில் உருவெடுத்துள்ளது.

The Creator

நான் கடந்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 2,00,000 பள்ளிக்கூட குழந்தைகளைச் சந்தித்தேன். அது போல சில மாதங்களுக்கு முன் மேகாலயா சென்றபோது அங்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி என்னைக் கேட்டாள் நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருக்கிறேனா என்று. நான் மாணவர்களை சந்தித்த இடம் ஒரு open air theatre. நான் மேலே வானத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. நான் சொன்னேன் "பூமி சூரியனைச் சுற்றுகிறது. சூரியன் கேலக்ஸியை சுற்றுகிறது. நாமிருக்கும் இந்த கேலக்ஸி யுனிவர்ஸில் ஒரு சின்ன கேலக்ஸி. நீங்கள் இரவில் இதைப் பார்க்கலாம். இதைப்போல ஏராளமான கேலக்ஸிகள் உள்ளன. நம்முடைய கேலக்ஸியிலும் நமது சூரியன் ஒரு சின்ன நட்சத்திரம். இதைவிட பெரிய பெரிய ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. நம்முடைய நட்சத்திரமான சூரியனிலும் ஒன்பது கோள்கள் உள்ளன. அதில் செவ்வாயையும் வியாழனையும் ஒப்பிட்டு பார்த்தால் பூமி ஒரு insignificant planet. நாம் மேலே பார்த்தால் ஆயிரமாயிரமாக தெரியும் அந்த நட்சத்திரங்களை பார் - இதையெல்லாம் ஒரு creator தான் create செய்யமுடியும். எனவே நான் ஆண்டவனை நம்புகிறேன்", என்றேன்.

இவ்வாறாக insignificant ஆக உள்ள இந்த பூமியிலும் 6 பில்லியன் மக்கள் உள்ளார்கள். நாம் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை எப்படி செய்ய முடியும். இதை நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.

வானகம் திறந்து வழிவிடும்

அந்த அற்புதமான பாடலை எந்து நண்பர் திரு. செல்வமூர்த்தியுடன் - நண்பர் செல்வமூர்த்தி ஒரு பெரிய விஞ்ஞானி - அவருடன் சேர்ந்து உங்களுக்கு பாடிக் காட்ட விரும்புகிறேன்.

அரிது அரிது மானிடராதல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தாலும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தக் காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே

இந்தப் பாடல் நன்றாக இருந்ததா?

இந்தத் தருணத்தில் என் மனதில் அந்த மகா மனிதர் வள்ளுவர் நினைவுக்கு வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவரது அற்புதமான நூலில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு குறள். அந்தக் குறள்:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு

இதன் பொருள் என்ன? The higher you aim you will raise to that level. You will succeed. This is the message.

இரண்டு ஆசைகள்

நான் சமீபத்தில் சென்னையில் அருங்காட்சியகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டேன். அங்கு என்னுடைய இரண்டு ஆசைகளை சொன்னேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன்.

அந்த ஆசைகளில் ஒன்று திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச்சுவடியை காணவேண்டும் என்று. அது முடியுமா? என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா? இதுவா உண்மை நிலை? நான் உங்களைக் கேட்கிறேன். எனக்கு என்னவோ தோன்றுகிறது அந்த original இந்தியாவில் எங்காவது கிடைக்கும் என்று. அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டாவதாக, அந்த கவிஞன், திருக்குறளில் எங்குமே தான் யார்? என்ன குலம்? எந்த நாடு? எந்த மதம்? என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மனிதனை பிளவுபடுத்தும் மதத்தையோ, நாட்டையோ அல்லது இனத்தையோ குறித்துப் பாடவில்லை. அவர் எல்லாக் குறளும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமாறு பாடினார்.

இந்த மனிதனில் அறிவு ஒளியைப் பாருங்கள். அவன் எந்த சூழ்நிலையில் திருக்குறளை எழுதினான்? எந்த சூழ்நிலையில் வாழ்ந்தான்? இந்தக் காலத்தில் மனித சமூகம் பல சச்சரவுகளில், பல பிளவுகளில் வாழ்வதை காணும்போது வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியம். இந்த ஆராய்ச்சியால் நம் நாட்டில், ஏன், இந்த உலகில் ஒற்றுமையை கொண்டுவர முடியும் - என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பெரும்பணிதானே? இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்களும், அமெரிக்காவில் உள்ள உங்களைப் போன்ற தமிழ் சங்கத்தினரும் சேர்ந்து இந்த முயற்சியை செய்ய வேண்டும்.

PURA

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? உங்களில் பலர் சிறு சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பீர்கள். சிலர் நகரத்தின் அருகிலுள்ள கிராமங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நாடு முன்னேற்றமடைந்து வளமான நாடாக மாறவேண்டும் என்றால் இந்த கிராமங்கள் செழிப்படைய வேண்டும். அதற்கு ஒரு முயற்சியாக PURA (Providing Urban facilities in Rural Areas) என்ற திட்டம் உருவாகியுள்ளது. புரொபஸர் இந்திரேசன் - அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் - I.I.T Director ஆக இருந்தவர். அவருடன் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த திட்டத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அத்திட்டத்தின்படி கிராமங்களை செழிப்படையச் செய்ய அங்கு நல்ல connecitivity கொடுக்க வேண்டும். முதலில் நல்ல சாலைகள் அமைக்க வேண்டும். அதில் போக்குவரத்துக்கென பஸ்களும், கல்விக்கென பள்ளிக்கூடங்களும், வைத்தியத்திற்கென மருத்துவமனைகளும் அமைத்து physical connectivity கொடுக்க வேண்டும். அதன்பிறகு Electronic connectivity கொடுக்கவேண்டும். அதாவது டெலிபோன், இண்டர்நெட் வசதிகள் கொடுக்கவேண்டும். இதன் மூலம் டெலிமெடிஸின், டெலி எஜுகேஷன், இ-கவர்னென்ஸ் போன்ற வசதிகள் ஏற்படும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் knowledge connectivity (அறிவு இணைப்பு) அளிக்க வேண்டும். அதாவது தொழிற்கல்வி வசதிகள் மற்றும் virtual classroom வசதிகள் செய்யவேண்டும். இவை அனைத்தும் கொடுத்தால் கிராமங்கள் செழிப்படையும். கிராமங்கள் செழிப்படைந்தால் மாநிலங்கள் செழிப்படையும். மாநிலங்கள் செழிப்படைந்தால் நம் நாடு வளமான நாடாகும். நாடுகள் செழிப்படைந்தால் உலகம் செழிப்படையும்.

இந்த முயற்சியில் நீங்களும் பங்காற்றலாம். ஒரு வளமான வலிமையான பாரதத்தை நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து உருவாக்க வேண்டும்.

இளம் உள்ளங்களில் பொறி ஏற்றுவோம்

இந்த நேரத்தில் எனக்கு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை நண்பர் செல்வமூர்த்தி இங்கு உங்களுக்கு பாடிக் காட்டுவார்.

வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே

அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியந் தனில் சிந்தனை
வீணாவதை மாபெரும் குற்ற மென்போம்

வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே

பொருள் வளமோடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் நூறாகிலும் இந்த
லட்சியச் சுடரினை பரப்பிடுவோம்

வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே

எனக்கு உங்களை எல்லாம் பார்த்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் நன்றாக உழைத்து வாழ்வில் வெற்றியடைய இறைவன் உங்களுக்கு எல்லாம் அருள் கொடுப்பானாகுக. இப்போது உங்களில் ஒருசிலர் 8 அல்லது 4 பேர் தமிழிலேயே கேள்வி கேட்டால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன்.

உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

ஆ.ப.ஜெ அப்துல் கலாம்
5.7.2003

இது குடியரசுத் தலைவரின் யூனிகோடுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஸ்வேதா மேகம் சிந்தும் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தேடுகிறேன்